
நிச்சயமாக அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டதாக ரஜினிகாந்த் என்னிடம் கூறினார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் அரசியல் விழிப்பு உணர்வு மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த மாநாடு ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை முன்னிறுத்தி நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய தமிழருவி மணியன் ரஜினிகாந்த் கூறியதாக நிறைய விஷயங்களைத் தெரிவித்தார். அதில் பேசிய தமிழருவி மணியன், 'காவிரி நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வரவேண்டும் என்று ரஜினி என்னிடம் கூறினார். ஆட்சியில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
மக்களின் பிரச்னையை தீர்க்கவேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் காமராஜரின் ஆட்சியை மீண்டும் காணவேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் நதிகள் இணைப்பை பத்து ஆண்டுகளில் செய்து முடிக்கமுடியும் என்றும் ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் நிச்சயமாக அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டதாகவும் ரஜினிகாந்த் கூறியதாக தமிழருவி மணியன் தெரிவித்தார்.
மேலும் பேசிய தமிழருவி மணியன், 'கடந்த ஐம்பது ஆண்டுகளாக இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தை சீரழித்துவிட்டன. ரஜினிகாந்தை தமிழகம் தவறவிட்டால் மக்கள் வாழ வழியில்லாமல் போகும். ரஜினிகாந்த் தூய்மையான அரசியல் செய்யப் புறப்பட்டுவிட்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று கோட்டையில் அமரும் நாள்வரும். இரண்டு திராவிடக் கட்சிகளையும் வங்கக் கடலில் கொண்டு புதைக்கவேண்டும் என்பதே எனது நோக்கம். வைகோ முதல்வராக வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், தற்போது அவருக்கு போதுமான வாக்கு வங்கி இல்லை. அரசியல் குறித்த முடிவுக்கு எடுப்பதற்கு முன்னதாகவே ரஜினிகாந்துக்கு 25 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. அவர் அரசியல் வியூகம் அமைத்தால் 45 சதவிகித வாக்கு வங்கி அமையும்' என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டார்..! தமிழருவிமணியன் சூளுரை
TAGS :
COMMENTS