'எதிரியை முதலில் சுற்றிவளைக்க வேண்டும்... பின்னர் வீறுகொண்டு தாக்க வேண்டும்' என்பதுதான் போர்க்களத்தின் யுக்தி! இந்தியாவின் அப்படி ஒரு பலவீனமான நேரத்தை பாகிஸ்தானும், சீனாவும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றன. அதுவும் சமீபகாலமாக சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவின் எல்லைக்குள் வந்து உரிமைக் கொண்டாடத் தொடங்கிவிட்டன. இதோடு விடவில்லை இந்த இருநாடுகளும் இலங்கையின் நட்புறவைப் பெறவும் காய் நகர்த்தி வருகிறார்கள். இந்தியா பாகிஸ்தானையும், சீனாவையும் எதிரியாக நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், இலங்கையை ஒருபோதும் எதிரியாகப் பார்க்காது; பார்க்கவும் முடியாது. தீவிரவாதத்துக்கு எதிரானப் போர் என்று சொல்லிக்கொண்டு லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்தது; இப்போதும் தமிழர்கள், இலங்கையின் இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டுவருகின்றனர். இப்படி தமிழர்களுக்கு எண்ணற்றக் கொடுமைகளை செய்துவரும் இலங்கையோடு நட்பு பாராட்டிவரும் இந்தியா, 2009-ல் நடைபெற்ற இறுதிப் போரின்போது, ஈழத் தமிழர்களை கொன்றொழிக்க இலங்கையோடு கைகோத்து செயல்பட்டது ஒன்றே போதும்! இந்தியா - இலங்கை நட்பின் ஆழத்தைக் குறிப்பதற்கு...!

இந்த நட்புக்கு காரணமாக இந்தியா முன்வைக்கும்  விஷயம்... 'இலங்கையை நாம் பகைத்துக்கொண்டால் இந்தியாவை ஆட்டிப்படைக்க நினைக்கும் சர்வதேச நாடுகள் இலங்கையுடன் நட்பு பாராட்டும். இலங்கையும் அந்த சர்வதேச நாடுகளுடன் நட்பு பாராட்டினால் அதன்பிறகு இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்' என்பதுதான். இதையெல்லாம் மனதில் கொண்டுதான் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் 'இந்திய நலன்களுக்கு எதிராக அந்நிய நாடுகளின் திட்டங்களுக்கு இலங்கை இடம் கொடுக்கக்கூடாது' என்று ராஜீவ்காந்தி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மிக வேகமாக மீறி வருகிறது.  இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், என்னென்ன விஷயங்கள் எல்லாம் நடக்கக்கூடாது என்று இந்தியா இதுநாள்வரையிலும் அக்கறை காட்டி வந்ததோ.... அந்த ஆபத்தான விஷயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. ஆம்... அதில் ஒன்றுதான் சீனா அரசின் ஹம்பன்தோட்டா துறைமுகம்! இலங்கையில் சீனா அமைத்துவரும் இந்தத் துறைமுகத் திட்டத்துக்கு இலங்கையின் நீதித்துறை மந்திரியாக இருந்த விஜயதாச ராஜபக்‌ஷே எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று (23-08-2017) அதிபர் சிறிசேனாவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராஜபக்‌ஷே ஆட்சிக் காலத்தில், இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தோட்டாவில் சீனா அரசு, துறைமுகம் மற்றும் ராணுவ தளம் அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இலங்கையின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், "ஹம்பன்தோட்டாவில், சீன கடற்படையை அனுமதித்தால், இந்தியப் பெருங்கடலில், நம் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்" என இந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் சீன அரசின் துறைமுகம் மற்றும் ராணுவ தளம் அமைக்கும் ஒப்பந்தம் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்ரிபால சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். அதன்பின் அந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, 'ஹம்பன்தோட்டா துறைமுகத்தில், வர்த்தகப் பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். சீன கடற்படையினர் இந்த துறைமுகத்துக்குள் வரக்கூடாது' என்ற நிபந்தனையோடு அனுமதியளிக்கப்பட்டது. இதனால் இலங்கை அரசுக்கு வணிக ரீதியான பல லாபங்கள் கிடைக்கும். மேலும், 'துறைமுகம் ஈட்டும் லாபத்தில், சீனா 70 சதவிகிதமும், இலங்கை 30 சதவிகிதமும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்' என்று ஒப்பந்தத்தில் சிறிசேனா தெரிவித்தார். இதன்படி கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி இந்தப் புதிய ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி சரியாக ஒருமாத காலம் ஆகவில்லை... அதற்குள் சீனா தனது துறைமுகம் கட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

 

'துறைமுகம்தானே கட்டுகிறார்கள்; இந்தியாவுக்கு  அதிலென்ன பிரச்னை வரப்போகிறது' என்று நினைக்கிறீர்களா? அங்குதான் பிரச்னையின் ஆரம்பமே இருக்கிறது. ஹம்பன்தோட்டாவில் சீனாவின் குத்தகை வருடம் எவ்வளவு தெரியுமா? 99 ஆண்டுகள். அதற்காகச் செலவிடப்படும் தொகை 6,500 கோடி ரூபாய். அதாவது அனைத்து வசதிகளையும் கொண்ட துறைமுகத்தின் 15,000 ஏக்கர் பரப்பளவு அடுத்து வரும் 99 ஆண்டுகள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இது வெறும் வணிக நோக்கம் கொண்ட துறைமுகமாக மட்டும்தான் செயல்படுமா... என்ற கேள்விக்கு 'இல்லை' என்பதே சீனாவின் பதிலாக இருக்கும். ஏனெனில், ஹம்பன்தோட்டா துறைமுகத்தில், ராணுவ தளத்தை அமைத்து  இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதே அதன் முக்கிய நோக்கம்! வளர்ந்து வரும் நாடுகளில் முன்னணியில் இருக்கும் சீனாவும் இந்தியாவும்தான் 'நீயா? நானா?' போட்டியில் இருக்கின்றன. இந்தப் போட்டியில், யார் முந்துகிறார்கள் என்ற விறுவிறு பார்வைதான் உலகநாடுகளுக்கும் இருந்து வருகிறது.  'இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கவேண்டும்; இக்கட்டான பல நெருக்கடிகளை கொடுக்க வேண்டும்' என்று சீனா முடிவெடுத்துவிட்டது. அதன் விளைவுதான் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆயுத உதவிகள் வழங்குவதும், இலங்கையில் துறைமுகம் அமைப்பதும். இதுமட்டுமல்ல... சீனா அரசின் 'ஒரு சாலை ஓர் இணைப்பு' என்னும் திட்டத்தை இந்திய அரசு எதிர்த்துவரும் நேரத்தில், இலங்கை அரசோ அந்தத் திட்டத்துக்கு முழு ஆதரவையும் அளித்துள்ளது. தற்போது ஹம்பன்தோட்டாவில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகமானது இந்தியாவுக்கு மட்டுமல்ல... வருங்காலத்தில் இலங்கையின் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறலாம். இதை எடுத்துச்சொல்லித்தான் இலங்கையின் நீதித்துறை மந்திரி விஜயதாச ராஜபக்‌ஷே, சீனாவின் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனால்தான் அவர் பதவி நீக்கமும் செய்யப்பட்டார். என்னதான் இந்தியா, இலங்கையை நட்பு நாடாக நினைத்தாலும், இலங்கை ஒருபோதும் இந்தியாவை நட்பு நாடாக ஏற்றுக்கொண்டதே இல்லை என்பதே வரலாறு சொல்லும் உண்மை!

இதைத்தான் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்த முடிவுக்குப் பின் சுதுமலையில் உரையாற்றிய விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனும் கூறினார். "இந்த ஒப்பந்தத்தால் தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே, தமிழீழ மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு" என்றார் பிரபாகரன்.

இப்போது இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுவரும் இந்தியா, அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!