முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வலியுறுத்தி வரும் 31-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திமுகவினர் சந்திக்க உள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கான ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் வாபஸ் பெற்றுவிட்டதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தினகரன் அணிக்கு தாவியுள்ளனர்.

இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநரை நேரில் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தினர்.

ஆனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து வரும் 31-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திமுகவினர் நேரில் சந்திக்க உள்ளனர்.

இச்சந்திப்பின் போது, எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வலியுறுத்தப்பட உள்ளது. இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இடதுசாரி தலைவர்களான ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன் ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை நேரில் சந்திக்க உள்ளனர்.

English summary


DMK has sought an appointment with President Ram Nath Kovind to seek his intervention in Tamil Nadu and to complain against Tamil Nadu Governor Vidyasagar Rao's role.