
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் விநாயர் சதுர்த்தி வெகு விமர்சையாகக் கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாஜக, இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா போன்ற பல்வேறு இந்து மதம் சார்ந்த அமைப்புகளின் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சுமார் 4,500 விநாயகர் சிலைகள் குமரி மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கின்றன.
இதற்கு போலீஸார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாவட்டம் முழுவதும் 2,150 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்தப் பணியில் வெளி மாவட்ட காவலர்களும் ஈடுபடுகின்றனர்.
சிலைகளை பிரதிஷ்டை செய்வது முதல் கரைப்பது வரை 24 மணிநேரமும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக ஷிப்ட் முறையில் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். 25-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 1-ம் தேதியும் 3-ம் தேதியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படவிருக்கின்றன. 1-ம் தேதி நாகராஜா திடல், மேல்புறம், மணவாளக்குறிச்சி பகுதிகளுக்கு ஊர்வலம் செல்கிறது. இதேபோல் 3-ம் தேதி நாகராஜா திடல் உள்பட 10 இடங்களிலிருந்து ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலங்கள் செல்வதற்கு போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி, சொத்த விளை, சங்குத்துறை, பள்ளிக்கொண்டான் அணை, மண்டைக்காடு, வெட்டுமடை, சின்னவிளை, மிடாலம், குழித்துறை ஆறு, திற்பரப்பு அருவி, தேங்காய்பட்டிணம் கடல்பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..! கன்னியாகுமரியில் பாதுகாப்புப் பணியில் 2,000 காவலர்கள்
TAGS :
COMMENTS