சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ் திருநாவுக்கரசர் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று திருநாவுக்கரசர் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதேசமயம், தற்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்தும் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவரான பிறகு திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசியுள்ளார் திருநாவுக்கரசர். நடிகர் ரஜினிகாந்த்தையும் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு அரசியலில் படு பரபரப்பாக இயங்கி வருகிறார் திருநாவுக்கரசர். முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு இரண்டு முறை சென்று அவர் முதல்வரின் உடல் நலம் விசாரித்து விட்டு வந்துள்ளார்.

அதிமுக ஆட்சியை சீர்குலைக்க பாஜக முயல்வதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை காங்கிரஸ் எதிர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது நடவடிக்கைகளை திமுக மிகக் கூர்மையாக கவனித்து வருகிறது.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இன்று சந்தித்துப் பேசினார் திருநாவுக்கரசர். இன்று பிற்பகல் 1 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த திருநாவுக்கரசர் அங்கு விஜயகாந்த்தை சந்தித்தார். இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசுகையில், இது மரியாதை நிமித்தமானது, நட்பு ரீதியானது. இன்றுள்ள பொதுவான அரசியல் விஷயங்கள் குறித்தும் பேசினோம். பல ஆண்டுகளாக விஜயகாந்த்தை நன்றாக தெரியும். இருவருக்கும் நட்பும், தொடர்பும் இருக்கிறது என்றார் அவர்.

சந்திப்பின்போது விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷும் உடன் இருந்தார்.

English summary

TNCC president Thirunavukkarasar is meeting DMDK president Vijayakanth today. After becoming the president of Tamil nadu Congress party, he has met various political leaders including DMK chief Karunanidhi. Recently Thirunavukkarasar visited Apollo hospitals with Congress vice president Rahul Gandhi it is noted.

News7Paper