சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அமைச்சர்கள் உட்பட யாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் சில விஷமிகள் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்வரை ஆளுநர் ஏன் இதுவரை நேரில் சந்தித்து விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் தமிழக ஆளுநரே நிர்வாக பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அப்போலோ மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.

அப்பல்லோ மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவார். பின்னர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றையும் ஆளுநர் வித்யாசகர் ராவ் வெளியிடக் கூடும் என தெரிகிறது. ஆளுநரின் வருகையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, மேயர் சைதை துரைசாமி ஆகியோரும் தற்போது மருத்துவமனை உள்ளே சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary

While there is a lot of speculation about Jayalalithaa's health the governor of the state, C Vidyasagar Rao is arrived in chennai likely to visit the Chief Minister in hospital

News7Paper