சென்னை: ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது முன்னிலை வகிக்க வேண்டிய 4 பேர் கொண்ட மருத்துவக் குழுவும் நீதிபதி தமிழ் செல்வியும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளனர்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார் ராம்குமார். திடீரென அவர் மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டது.

இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை பரமேஸ்வரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 3 மருத்துவர் கொண்ட குழு ஒன்றின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று காலை 8 மணி அளவில் ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, 4 பேர் கொண்ட மருத்துவ குழுவும், நீதிபதி தமிழ்செல்வியும் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு வந்து ராம்குமாரின் பிரேத பரிசோதனையை பார்வையிட தயாராக உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை, தங்களது மருத்துவர் ஒருவர் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்றும் தடயவியல் நிபுணர் ஒருவரும் உடன் இருக்க வேண்டும் என்றும் புதிய மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தற்போது ராம்குமாரின் பிரேத பரிசோதனை தள்ளிப் போடப்பட்டுள்ளது.

பிற்பகலுக்கு பின்னர்தான் பிரேத பரிசோதனை எப்போது நடக்கும் என்பது தெரிய வரும்.

English summary

Doctor’s team and Magistrate are ready for Ramkumar post-mortem in Royapettah Hospital.