பெங்களூர்: காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க நாளை கர்நாடக சட்டசபை கூட்டுக் கூட்டத்தை கூட்ட அம்மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று முடிவு செய்தது. எனவே ஆளுநர் வஜுபாய் வாலாவை இன்று சந்தித்து, நாளை சிறப்பு சட்டசபையை கூட்டுவதற்கு கோரிக்கை விடுத்தார் சித்தராமையா.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என்று கர்நாடக அமைச்சரவை கூட்டம் நேற்று முடிவு செய்தது. சிறப்பு சட்டசபையை கூட்டி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நாளை சிறப்பு சட்டசபை கூட்டம் கூடுகிறது.

சட்டசபையை கூட்ட ஆளுநர் அனுமதி தேவை என்பதால், இன்று காலை மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து சட்டசபையை கூட்ட கோரிக்கைவிடுத்தார், சித்தராமையா. சீனியர் அமைச்சர்கள் அப்போது உடனிருந்தனர். சட்டசபை கூட்டத்தை கூட்ட ஆளுநர் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பெங்களூர்-சதாசிவநகர் பகுதியிலுள்ள முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டுக்கு சென்ற சித்தராமையா அவரிடம் ஆலோசனைகள் பெற்றார்.

இதன்பிறகு இன்று மதியம் டெல்லி செல்லும் சித்தராமையா காங்கிரஸ் சீனியர் தலைவர்களை சந்திக்கிறார். பிரதமர் மோடியிடம் சந்திப்புக்கு நேரம் கேட்டுள்ளார் சித்தராமையா. ஆனால் மோடி இவரை சந்திக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை அவர் சந்திக்க உள்ளார்.

உமா பாரதி சன்னியாசம் பெற்றது, உடுப்பி பெஜாவர் மடாதிபதியிடம். எனவே அவருக்கு கர்நாடகா மீது தனிப்பாசம் உண்டு. எனவேதான் நேற்று அவரை மத்திய அமைச்சர் சதானந்தகவுடா சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Karnataka CM Siddaramaiah to meet Governor and request him to convene Assembly session to discuss Cauvery issue.